விவாகரத்து வழக்கொன்றில் நான் மொழிபெயர்ப்பாளராக ஒரு பெண்ணுடன் போய் இருந்தேன். அந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள். கணவனுடன் நல்ல உறவு இல்லை, கொடுமைக்காரனாக அடக்குமுறை கொண்டவனாக இருந்தவன் என்று தெரிந்தும் ஏன் இரண்டு பிள்ளை பெற்றுக்கொண்டாய் என்று கேட்கும் உறவினர், அன்னை, சகோதரி கூட்டம். இந்த நாளில் எத்தனை கர்ப்பத்தடை வழிகள் உண்டு ஆனாலும் இத்தனை முட்டாளாக ஒரு பெண்ணா என்று பேசும் நண்பர் கூட்டம் என்று அத்தனையும் உண்டு.
13 குழந்தைகள் கொண்ட பென்ணை கேலி பேசுவதும், அதேபோல குழந்தை இல்லாத பெண்ணை குறை கூறுவதும், மங்களகரமான நிகழ்வுகளில் இருந்து விலக்கி வைப்பதும் எத்தனை குரூர செயல். இன்னமும் கருவைத்தாங்கும் பெண்களுக்கு நம் நாட்டில் முழு உரிமை இல்லை என்பதை யாரேனும் உணர்வார்களா?
திருமணம் ஆனபின், கணாவனுடன் உறவு கொள்வதற்கு திருமணத்தில் பேசிய தொகை முழுதும் வராதவரை இல்லை என்று சொல்லி தடை சொல்பவரிலிருந்து, இன்று விசேஷ நாள் (விரத நாள்) என்று சொல்லி தடை விதித்து, மனைவி கண வனுடன் கூட செல்லும் நாளில் அவரின் மாத சுழற்சியில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் இல்லாமல் போவதால் குழந்தை பிறக்கவில்லை என்று மருத்துவர்கள் சொன்ன போதும், பிடிவாதமாக இருந்து கடைசியில் மலடி என்ற பெயரோடு வாழ்ந்தவர்கள் உண்டு. என் சகோதரியின் உறவினர் ஒருவர் கணவனின் அன்னையின் காவலில் இருந்தே 35 வயதாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அன்னையும், கணவனும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட, இப்போது தனியாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இன்னொருபக்கம் கவனக்குறைவால் கருத்தரித்து, குடும்ப நிதி நிலைமை அதற்கு இடம் தராததால் ஊசி கொண்டும், செயற்கையாக தகுந்த திறமை இல்லாதவரிடம் சென்று கருக்கலைப்பு செய்து கொள்ள வற்பூறுத்தி, மாட்டேன் என்று மனைவி அழுது கெஞ்சினால் நான் வேண்டுமா இந்த பிள்ளை வேண்டுமா என்று முடிவு செய்து கொள் என்று பயமுறுத்தி பணியவைப்பது இன்னொரு ரகம்.
இன்னும் சில குடும்பங்களில் கணவன் நிறைய முடிக்க வேண்டிய கடமை இருந்தால், அக்கா தங்கை திருமணம், வீட்டு கடன் என்று முடியும் வரை பிள்ளை பெற்று கொள்ள பெண்னுக்கு உரிமை இல்லை. தவ றி கருத்தரித்துவிட்டால், நமக்கென்ன வயசா ஆயிடுத்து, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று முடிவெடுப்பதும் கணவனே. இதே மனைவியின் உடல் நலம் கருக்கலைப்புகளால் அல்லது தடை மாத்திரைகளால் கெட்டுவிடும் என்ற அக்கறை கூட இல்லாமல் சுயநலத்துடன் நடந்து கொள்பவர்களை என்ன சொல்ல?
கருத்தரித்தபின் முதல் குழந்தை ஆணாக வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால், அந்த பெண் அடையும் துன்பங்கள் இன்னமும் நிறைய இடங்களில் மாறவில்லை. ஆண் குழந்தை பிறக்கும் வரை அடுத்தடுத்து உருவாகும் கருக்கள் அவள் உடல் நலனை அடியோடு கெடுத்துவிடும். இந்த பழக்கம் இங்கே யூதர்களிடமும் இருக்கிறது.
சில பெண்கள் விரும்பாமலே கணவன் உறவு கொள்வது சாதாரணம். அதிலும் வாய்வழி உறவு கொள்வதை அருவெறுப்பாக நினைக்கும் பெண்களுக்கு, அதனால் நோய்வாய்ப்பட நேருமோ என்ற அச்சம் உள்ளவர்களிடம் அதுபற்றிய கல்வி தராமல் கட்டாயப்படுத்தும் போது மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகம்.
நிறைய பெண்களிடம் தங்கள் உரிமைகளை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. பெண் கணவனின் உடைமை என்றே பலரும் நினைக்கிறார்கள். உடல் வலி, மன உளைச்சல் இதை பொருட்படுத்தாமல் கடமை போல பயத்தினால் உடன் படுகிற பெண்கள் அதிகம். நாம் வேண்டாம் என்று சொன்னால் வேறெங்காவது கவனம் போய் கணவனை இழந்துவிடுமோ என்ற பயம் பெண்களை உடன் பட வைக்கிறது.
கட்டாயப்படுத்தி உறவு கொண்டு, தற்காப்பும் இல்லாமல் கடைசியில் அந்த பெண் கர்ப்பமானால் எள்ளி நகையாடுவது எப்போது மாறும்? இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தற்போது ஒரு குழந்தை, இந்த நிலை மாறிவிட்டது என்று சொல்பவர்கள் தமிழக, மெட்ரோபாலிட்டன் நகரங்களை தாண்டி வெளியே வாருங்கள். கிராமப்புறங்கள், குறிப்பாக மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மற்றும் பீஹார் போன்ற இடங்களுக்கு , கிராமங்களுக்கு சென்று பார்த்தால் இதன் கொடுமை தெரியும். இங்கே நியுஜெர்ஸியிலேயே அப்படி வரிசையாக குழந்தை பெற்று கொண்டு திண்டாடும் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
தயங்கி தயங்கி அவமானமும் வெட்கமும் மேலிட, அவர் ரொம்ப கட்டாயப்படுத்திதான் நடந்தது. எல்லாரும் என்ன தப்பு சொல்றாங்க: என்று கண்ணீருடன் சொல்லும் பெண்ணிடம் பேசினால் தெரியும் நாம் மனைவியின் உணர்வுகளுக்கு எத்தனை உரிமை தருகிறோம் என்று. ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்று பாடிவிட்டு பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா என்றும் கேலிபேசுவதும் அதே இனம்தானே.
கருக்கலைப்பை பற்றியும் அதில் இருக்கிற உரிமைகளையும் அதில் மதங்கள் தலையிடுவதையும் பற்றி பேசவில்லை. அதற்கெல்லாமல் ஆதார உறவினிலேயே இருக்கும் அடக்குமுறை பற்றி மட்டுமே இங்கே கூறி இருக்கிறேன்.
இந்த நிலையில் இந்தியாவில் பல இடங்களில் பெண்கள் தினம் கொண்டாடப்படலாம். அவர்கள் விழாக்கொண்டாட்டம் இடையே விழிப்புணர்வு சற்றேனும் ஏற்படுத்துவார்களானால் அதுவே பெண்களுக்கு உதவியாக இருக்கும்.
தொடர்புடைய சுட்டி: பெண்களின் நெருக்கமான பகைவன்