நம்முடைய நாட்டிலே இதேபோல இலவச கல்வி அளிக்கப்பட்டாலும் பல கிராமங்களில் ஏழைகளின் நிலை வேறு. பள்ளிக்கு அனுப்பிவிட்டால் தன்னுடன் கூட வேலைசெய்ய, இன்னொரு வருமானம் வர என்றெல்லாம் இருக்கும் முதல் பிள்ளையை அனுப்ப மனம் வருவதில்லை. பெண் குழந்தைகள் தன்னைவிட சிறியவர்களை பார்த்துக்கொள்ளவும் மற்ற வீடுகளில் வேலை செய்யவும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். என் தாதியர் சங்கிலி என்ற தொடர் பதிவில் இதனை பற்றி பல புள்ளிவிவரங்களோடு எழுதி இருந்தேன். நம்முடைய வீட்டில் நாமே விருப்பப்பட்டு வேலைகளை செய்வது வேறு, அதே இதுதான் நீ பிழைக்க செய்ய கூடிய ஒரே தொழில் என்று நிர்ப்பந்திக்கப்பட்டு செய்வது வேறு.
கல்வி அறிவு மன மாற்றத்தை தரும் என்றால் அந்த கல்வி அறிவு தரப்படவும் வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே. நாங்கள் இலவச கல்வி, சத்துணவு என்ற அனைத்தும் தருகிறோம் பெற்றோர்கள் அனுப்ப முன்வருவதில்லை என்றால் ஏன், எதனால் என்று யோசிக்க ஒரு அரசு முன்வர வேண்டாமா? அரச குடும்பத்தினருக்கு மட்டுமே வில்பயிற்சி அளிபேன் என்று ராதேயன்களை மறுத்த காலம் மாறி இப்போது ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் சமமானவர்கள் என்ற நிலை வர வேண்டாமா?
ஸ்வதேஷ் என்ற திரைப்படத்தில் பார்த்ததுபோல பல கிராமங்களில் கல்விகூட கீழ்சாதி மக்களுக்கு மறுக்கப்படுவதும் உண்டு. இது சட்டப்படி குற்றம் என்றால், குற்றம் சொல்ல செல்லும் காவல் நிலையம், நீதிமன்றம் இவற்றில் இவர்களுக்கு ஏற்ற நீதி கிடைக்குமா? அமெரிக்காவில் நிலை மாறியதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, சட்டங்கள், அதை(பெருமளவில்) மீறாத காவலர்கள்/நீதித்துறை காரணம்.
கீழ்சாதி பெண் ஒருத்தி மேல்சாதி ஆடவனை காதலித்த குற்றத்திற்காக அவளை 8 மேல் சாதியினர் கூட்டாக வன்புணராலாம் என்று தீர்ப்பளித்த பீகாரின் சட்ட பஞ்சாயத்து முன் அரசாங்க சட்டங்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்பது தெரியுமா?
படித்து முடித்து அமெரிக்காவிற்கு நல்ல பணியில் வரும் இந்தியர்கள் அனைவரையும் சமமாக பாவித்திருப்பார்கள் என்றால், கட்டுமான வேலை முதல் கும்பாபிஷேகம் வரை அத்தனை வேலைகளையும் செய்த ஒரு பெண் (அதே சமூகத்தின் இன்னொருபிரிவை சேர்ந்தவர்), சமையலில் உதவிக்கு செல்ல முன்வந்தபோது, கறிகாய் வேண்டுமானால் வெட்டி கொடு, பாத்திரங்கள் கழுவு ஆனால் நீ சமைத்தால் இவர்கள் உண்ண மாட்டார்கள் என்று சொல்லி தடுத்ததும், சாப்பிட வந்தபோது மூன்றாம் பந்தியில்தான் சாப்பிட வேண்டும் என்றும் சொன்னதால் இப்போது அந்த கோவிலுக்கே இவர்கள் செல்வதில்லை.இவர்கள் அனைவரும் மெத்த படித்தவர்கள்தான். நான் சமையல் செய்தால் அதை உண்ண மறுப்பவர்கள் உண்டு ( அவ்வளவு மோசமாக சமைக்க மாட்டேன் எங்கள் வீட்டில் சில சடங்குகள் செய்விக்கவில்லை என்பதால்). இவர்கள் மீதும் தவறில்லை, ஏன் என்றால் இது தவறு என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இவர்கள் சில சம்பிரதாயங்களை நம்புகிறார்கள்.
பூஜைக்கு முன் திடீரென பால் வாங்க சென்றுவிட்டு அங்கே உள்ள கடைக்காரரிடம் “நான் வரிசையில் நின்றால் என் மீது யாராவது பட்டுவிடுவார்கள். இது என் மதம் சார்ந்த நம்பிக்கை ஆகவே என்னிடம் உடனே காசை வாங்கி கொள்” என்று சொன்னவர்களை பற்றி இங்கே கதைகள் உண்டு. இல்லை என்றால் வழக்காடுமன்றத்திற்கு என் மதத்தை அவமானப்படுத்திவிட்டார் என்று சொல்வாரோ என்று உடனடியாக அவருக்கு உதவிசெய்த கடைக்காரரும் உண்டு.
எங்கள் வீட்டில் பல வயலில் வேலை செய்யும் விவசாயிகளின் குழந்தைகள் மாலை வேளையில் வந்து பாடம் படிப்பது வழக்கம். அதேபோல கோவிலுக்கு (வைத்தீஸ்வரன் கோவில்) வருபவர்கள் யாரானாலும் என் வீட்டில் பைகளை வைத்துவிட்டு குளித்து கோவிலுக்கு செல்வதும் வழக்கம். இதனால் என் பெற்றோர்களை அவமரியாதை செய்த உறவினர்கள் உண்டு. இதுவாவது நடந்தது 70களில். ஆனால் சமீபத்தில், 2005இல் வசதிகுறைந்த மாணவர்கள் படிக்க நிதிஉதவி என் கணவரிடம் கேட்டு வந்தவரிடம், என் சகோதரர்களும் உதவுவார்கள் என்றபோது” உங்களுக்கு புரியவில்லை. தவறாக கருத வேண்டாம், சடங்குகளில் நம்பிக்கை இல்லாத காரணங்களுக்காக உங்கள் சகோதரர்கள் இந்த உதவி செய்ய முடியாது” என்று சொன்னபோது எனக்கு நிஜமாகவே புரியத்தான் இல்லை.
தமிழ்நாட்டில் முன்னேற்றம் இருப்பதும், மக்கள் மனம் மாறிவருவதும், படித்த இளைஞர்கள்/பெண்கள் நிறைய பேர் அரவணைத்து செல்வதும் இருந்தாலும் இது குறைந்த சத விகிதமே. சக மனிதர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பது இயல்பானது. நம்மை ஒருவர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதேபோல நாம் இன்னொருவரை நடத்த ஏன் மறுக்கிறோம்?