சில பதிவுகள் படிக்கும் போது நிறைவும், சில சுவையாகவும் சில சிந்திக்க தூண்டுவதாகவும் இருப்பதுண்டு. வெங்கட்டின் பதிவினை படித்த போது என் வீட்டில் நடந்த சில இளமைக்கால நிகழ்வுகள் நினைவுக்கு வர அதைப்பற்றி பேசிக்கொண்டும் நினைவுகளில் மூழ்கிப்போகவும் முடிந்தது. நீங்கள் என்னதான் சாதித்திருக்கிறீர்கள் என்று யாரவது கேட்டாலே ஒன்றுமில்லை என்பதுதான் பொருள்.
வாழ்க்கையில் பெரும்நாட்களை ஒரு படி ஏறவே திண்டாடி கழித்ததாலோ என்னவோ சாதனை என்று பெருமை கொள்ள எதுவும் இல்லை என்றாலும் மன மகிழ்வைத் தந்தவையும் எனக்குள்ளேயே பிடித்துப் போனவையுமாக நிறைய செய்திகள் உண்டு. அந்த பட்டியலில் எட்டு
1. இந்திய அறிவியல் தொழில்நுட்பக்கழகத்தில் 35 வயதுக்கும் கீழானோருக்கா ஆராய்ச்சிக்கு நிதி வழங்க செயல்திட்டம் உண்டு. நான் AIIMSஇல் சேர்ந்த போது அதற்கு படிவங்கள் அனுப்ப ஆர்வம் கொண்டபோது, என்னிடம் இன்னமும் ஆராய்ச்சி முனைவர் பட்டம் இல்லை, ஆராய்ச்சி செய்த பயிற்சியும் இல்லை என்று படிவங்கள் தர மறுத்துவிட்டனர். 35 வயதுக்கீழாக உள்ளவர்கள் எல்லாம் பங்கு பெறலாம் என்ற போதும் எழுதப்படாத விதிகள் இருந்தது அறிந்து, திரு. வசந்த கவரிகர்(அப்போதைய DST தலைவர்) அறைமுன் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்து மூன்று நாள் கடந்து எனக்கு விண்ணப்பங்கள் தர ஒப்புக்கொண்டனர். இந்த திட்டங்கள் ஒரு பரிந்துரைக்குழுவிற்கு செல்லும். அங்கே நல்ல முறையில் பரிந்துரை செய்யப்பட்டால் 3 வருடம் நிதி கிடைக்கும். எனக்கு கிடைக்காது என்று பலரும் AIIMSஇல் நம்பிக்கொண்டிருக்க, அந்த வருடம் பரிந்துரை செய்யப்பட்திலேயே சிறப்பான திட்டம் என்று சொல்லப்பட்டு வழகத்திற்க்கு மாறாக கூடுதல் நிதியும் கிடைத்தது. அதன் பின் வருடாவருடம் இளம் ஆராய்ச்சியாளர்களும் அதற்காக விண்ணப்பிக்க முடிந்தது.
2. இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். 5 நிமிட பேச்சு 20 நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களின் உடல்நலம் பாதிக்க கூடிய வகையில், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து எடுக்கும் இரத்தம் செல்களை அகற்றிய பிறகு கழிவுநீர்க்குழாயில் கொட்டப்படுவதும், ரேடியோ கதிர்வீசும் வேதிப்பொருட்கள் பயன்படுத்திய சாதனங்கள் சுத்தம் செய்யப்படுவதும் எத்தனை முறைகேடானது என்ன்பது தொடங்கி, அறிவியல் திட்டங்களுக்கான நிதியில் எத்தனை முறைகேடு நடக்கிறது என்பதற்கு AIIMs இல் நடப்பதை சொன்னதும், மறுநாள் வட இந்திய பத்திரிக்கைகள் young scienctist uproar என்று எழுத, தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக, என்னை நீக்கிவிடுவார்கள் என்று அண்ணன் பயப்பட, பெற்றொர் கடிந்துகொள்ள இவை யாவும் நடவாமல், ராஜீவுடன் நெருங்கி பழகவும், பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர் சிலருக்கு மருத்துவ உதவி தரவும், அதன் பின் AIIMSஇல் சில மாற்றங்கள் ஏற்பட்டதும் மறக்க முடியாதது.
3. இப்போதெல்லாம் அமெரிக்கா பழகி இருந்தாலும், 86இல் முதன் முதலாக DStயில் கிடைத்த நிதி உதவியில் steamboat Springsக்கு வந்த போது, super 8 Motelல் தங்கியதும், கொட்டும் பனியில் சாதாரண செருப்புடன் ஒரு மைல் தள்ளியுள்ள மாரியாட்டுக்கு போக முயன்றதும்(முழங்கால் அளவு பனியில் பருத்தி உடையும் பாட்டா செருப்புமாக செல்ல நினைத்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்) பார்த்த ஒரு 18 சக்கர ட்ரக் ஓட்டுனர் அனுதாபம் கொண்டு தினமும் காலையில் கூட்டத்திற்கு அழைத்து போனதும், உணவு பொருளில் எதை சாப்பிடலாம் என்று தெரியாமல், எல்லவற்றையும் இந்திய ரூபாயில் கணக்கு பார்த்து பாதி நேரம் பசியுடனும் மீதி நேரம் குளிருடனும் இருந்து, கூட்ட முடிவில் சிறந்த ஆராய்ச்சி சுவரொட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் முனைவர் பட்டம் கிடைத்தபின் மேல் ஆராய்ச்சிக்கு வேலையையும் ஏற்படுத்திக்கொண்டு ஊர் சென்றது பசுமையான நிகழ்வு.
4. கார்னெல் பல்கலை கழகத்தில் இளம் ஆராய்ச்சியாளருக்கான விருது பெற்றதும், யூரிஸ் ஆடிட்டோரியத்தில் பேசியதும்(அங்கே பேசுவது அப்போது உயர்வாக கருதப்பட்டது), 5 நிமிட நிகழ்ச்சிக்காக கேடி (Katie couric) யுடனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாளருடன் 3 மணி ரிகர்சலும் தந்த நிறைவைவிட, கார்னெல் மருத்துவக் கழக தலவர் என் பெற்றோரிடம் என்னை பற்றி பேசிய போது அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி பரவாயில்லை, நாம் ஒழுங்காகத்தான் வளர்ந்திருக்கிறோம் என்ற நம்பிக்கை இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது.
5. நிதிக்காக படிவங்கள் அனுப்பும் போது சில ஆராய்ச்சி முடிவுகளை உடன் அனுப்பி எப்படி எங்கள் திட்டம் வெற்றி பெரும் என்று சொல்வது சாலச் சிறந்தது. மனித மரபணு ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அவ்வாறாக நாங்கள் திட்டம் அனுப்ப சில கடைசி கட்ட பரிசோதனைகளை திரும்ப செய்ய வேண்டி இருந்த போது எனக்கு எந்த நாளிலும் குழந்தை பிறந்துவிடும் என்று இருந்ததால் என் ஆராய்ச்சி துறை தலவருக்கு சற்றே சங்கடமாய் இருந்தது. எப்படியும் நான் முடித்து, முடிவுகளை ஆராய்வு செய்து குறிப்பு எழுதிவிடுவேன் என்று கொடுத்த வாக்கை காப்பாற்ற, ஒரு நவம்பர் 17 காலை 6 மணிக்கே ஆய்வகம் சென்று அன்றைய நாளுக்காக பரிசோதனைகள் தொடங்கி நீண்ட நேரம் வளரக்கூடிய DNA cultur தொடங்கி, அர்விந்த் அலுவகம் சென்றபின் அம்மாவை அழைத்துக்கொண்டு நானே மருத்துவமனையில் முன்பே மருத்துவருடன் பேசி திட்டமிட்டபடி என்னை சேர்ப்பித்து, மாலை அர்விந்த் வரும்வரை, ஒருபக்கம் ஆக்ஸ்டோசின் உள்ளே சென்றுகோண்டிருக்க, உடன் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுடன் நிதி திட்டத்தை முடிக்க பேசிக்கொண்டிருந்து, மாலை 7 மணிக்கு அர்விந்த் அலுவலகத்தில் இருந்து வந்தபின் 8 மணிக்கு பிள்ளை பெற்று, மறு நாள் காலையில் 5 மணிக்கெல்லாம் அர்விந்த அலுவகம் சென்றுவிட, நான் 6 மணிக்கு ஆய்வகம் சென்று முடித்ததும், நிதி திட்டத்தை நேரத்திற்கு அனுப்பியதும் நிறைவான ஒரு விஷயம்.
6. எதனையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் காரணமாகவோ என்னவோ புதிதாக ஒரு வேலைக்கு சேரும் முன் அதன் தொடர்பாக படித்துவிடுவது உண்டு. ஆராய்ச்சிக்கு பின் மேலாண்மை(நிர்வாகவியல்)யும், பொதுநலமும் படித்தபின்னும், ஒரு நிதி திட்டமிடுபவருடன் பேசியபோது அவர் சொன்ன எதுவும் புரியாமல், எப்படி கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை அடிப்படை கூடத் தெரியாமல் முதலீடு செய்வது என்று யோசித்து அதன் காரணமாக series 7, 65, 66 என்று சான்றிதழ்கள் பெற்று ஸ்டாக் புரோக்கர் லைசென்ஸ் பெற்றதும், உடல்நல பயிற்சிக்கான Cerified health education specialist தேசிய சான்றிதழுக்கான தேரிவில் வெற்றி பெற்றதும், பணியில் சில நேரங்களில் உதவும் என்று இப்போது corporate law என்றும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
7. மேலாண்மை படித்துக்கொண்டிருந்த போது அப்போதைய லியுசெண்டிர்கான ஒரு திட்டம் எழுதி, அதை பற்றி பேசி முதல் பரிசு வாங்கி அது வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் பெயருடன் திட்டக்குறிப்பும் வந்ததுகூட ஆச்சரியமான விஷயம். இந்த திட்டங்களை ஆராயும் குழுவில் பல நிறுவன தலைவர்கள் இருந்ததும் என் திட்டத்தை பாராட்டியதும் இன்னும் நினைவில் உள்ள நிகழ்வு.
8. காகேசியன் ஆடவர்கள், அதுவும் 20 வருடமாக கூடவே பணி செய்பவர்கள் நிறைந்த அரசாங்க குழுக்களில் முதன் முதலாக ஒரு பெண் அதுவும் இந்தியாவில் இருந்து வந்தவர் என ஆரம்பத்தில் அலட்சியமாக பார்க்கப்பட்டது மன வருத்தத்தை தந்தாலும், பிறகு என் பணிகள் மூலமாக கவனத்தை கவர்ந்து, சிறந்த சமுதாய திட்டமாக சமீபத்தில் என் திட்டம் ஒன்று தேர்வு செய்யப்பட்டதும், NACCHO விலும், வெள்ளை மாளிகையில் இருந்து உடல்நல கொள்கை பற்றி திரு. புஷ்க்கு உதவவும் அழைக்கப்பட்டது சில காரணங்களால் என்னால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், என்னாலும் முடியும் என்று தன்னம்பிக்கை தந்ததாலும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இது எல்லாவற்றையும் மீறி என் மகனின் நண்பர்களின் பெற்றோர்களும் அவனுடைய ஆசிரியர்கள், அவன் ஈடுபட்டுள்ள மருத்துவமனை தன்னார்வ குழுத்தலைவர்கள் your mom did a good job raising you என்று என் மகனிடம் சொல்லும் போதும், நிராதரவான பெண்களுக்கு நிரந்தரமான வருவாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏற்பாடு செய்யும் போது அவர்கள் முகத்தில் தெரியும் நிறைவும் இன்னும் அதிக மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
நிறைவினை தந்த தகவலா இல்லை பொதுவான தகவலா என்று தெரியாததால் இரண்டையும் எழுதி இருக்கிறேன்.
பொதுவான எட்டு தகவல்கள் என்றால்
1.இருட்டை கண்டால் பயம்
2.அவசரகதியில் வரும் வேலை தவிர இரவு எட்டு மணிக்கு மேல் குடும்பத்திற்காக மட்டுமே என் நேரம்
3.பிடிக்காத அல்லது வேருபாட்டு காட்டும் எந்த அரசு இயந்திரமானாலும் விளைவுகள் ஆராயமல் போராடுவது இல்லை எதிர்ப்பை தெரிவிப்பது
4. நான் செய்தது தவறாகுமானால் தெரிவிப்பத்துடன் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்வது
5. அர்விந்தின் அலுவக திட்டங்களில் கூடுமானவரை உதவுவது
6. திட்டமும் வேலையும் பிடித்திருந்தால் ஊதியத்தை கணக்கில் கொள்ளாமல் உழைப்பது
7. முடியாது என்று சொல்லாமல் நிறைய நேரம் கூடுதல் பணிகளை சுமப்பது
8. சமீபகாலமாக தீவிரமாக உடற்பயிற்சி செய்வது
நான் அழைக்க விரும்பும் சிலர்
1. மங்கை
2. அருணா ஸ்ரீனிவாசன்
3.மூக்கு சுந்தர்
4.திரு
5. Voice on Wings
6.நிர்மலா
7. பிரபு ராஜதுரை
8. செல்வநாயகி
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்